மழை நோய்களுக்கு செலவில்லா மருத்துவம்

          தமிழகத்தின் பல பகுதிகளும், குறிப்பாகச் சென்னையிலும் மழை, வெள்ளம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள காலம் இது. மழைக்காலத்தில் அதிகமாகத் தேங்கியுள்ள மழைநீர்-கழிவுநீராலும், குடிதண்ணீர் மாசுபட்டிருந்தாலும் பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்கிருமிகள் பெருகுவது வழக்கம். இப்படிப் பரவலாகும் நோய்களை எளிய சித்த மருந்துகள் மூலம் சுலபமாகக் குணப்படுத்த முடியும்.

சீரகத் தண்ணீர்
மழைக் காலத்தில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் தண்ணீரில் கலந்திருக்க அதிக வாய்ப்பு உண்டு. இதனால் மஞ்சள்காமாலை, வாந்திபேதி, டைபாய்டு போன்ற நோய்கள் பரவலாம். சாதாரணமாகவே தண்ணீரைக் கொதிக்க வைத்து, வடிகட்டிதான் பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்யும்போது உலோக உப்புகள் ஆவியாகி விடுவதால், இந்தத் தண்ணீர் சுவையற்று இருக்கும். இதற்கு நல்ல மாற்றாகச் சீரகத் தண்ணீர் அமையும். சித்த மருத்துவத்திலும், தமிழக மக்களிடம் பன்னெடுங்காலமாகவும் பழக்கத்தில் உள்ள தண்ணீர் இது.
       ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 சீரகம் போதும். எண்ணிப் போட முடியாவிட்டாலும் தேக்கரண்டியில் சிறிதளவு எடுத்துப்போட்டு, அரை மணி நேரம் அல்லது 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தளதளவென்று வரும்வரை கொதிக்கவிட வேண்டும். பிறகு வடிகட்டிப் பயன்படுத்தலாம். இதனால் தண்ணீரில் உள்ள கிருமிகள் நீக்கப்படுகின்றன. இதற்குச் சீரகத்தில் கியூமினால்டிஹைடு என்ற வேதிப்பொருளே காரணம். அது மட்டுமில்லாமல் சீரகத்தில் உள்ள வேதிப்பொருட்கள் கலந்து தண்ணீரின் சுவையைக் கூட்டுகின்றன. இந்தத் தண்ணீர் செரிமானத் திறனை அதிகரிக்கும். இது ஒரு நல்ல ஆன்ட்டி ஆக்சிடண்ட்டும்கூட. பெயருக்கேற்ப சீரகம், உடலை (அகத்தை) சீராக வைக்கும்.

கட்டிடச் சீரழிவு நோய்
அதிக மழையால் வீட்டின் உட்புறச் சுவர்வரை நனைந்திருக்கும் நிலைமையுடன், வீட்டுக்குள் நீர் புகுந்ததாலும் பூஞ்சைகள் வளர்வதைக் காணலாம். இதற்குக் காரணம் Gloeocapsa Magma என்ற பாக்டீரியா. இதனால் வீட்டின் உட்புறக் காற்று மாசுபடுவதால் கட்டிடச் சீரழிவு நோய் உருவாகி (Sick building syndrome) மூக்கு, கண், தொண்டை பகுதியில் எரிச்சல், தலைவலி, உடல்வலி, ஆஸ்துமா போன்றவற்றை ஏற்படலாம். உலகச் சுகாதார நிறுவனம் கட்டிடச் சீரழிவை நோய் என்று வரையறுத்துள்ளது. இந்த நோயை எதிர்கொள்வதற்கான வழிகள்:
1. வீட்டுக்குள் சுத்தமான காற்று சென்று வர, மழை நின்றிருக்கும்போது கதவு, ஜன்னல்களைத் திறந்து வைப்பது.
2. ஃபார்மால்டிஹைடு, ஸைலீன், நைட்ரஜன் ஆக்சைடு போன்றவற்றால் ஏற்பட்ட நச்சுக் காற்றை நீக்க மருள் (sansevieria) எனும் தாவரத்தை வீட்டுக்குள் தொட்டியில் வளர்க்கலாம். ‘இருள் நீக்கும்' என்று சித்தர்களால் பெருமைப்படுத்தப்பட்ட இந்தத் தாவரம் பற்றி, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும் சுட்டிக்காட்டியுள்ளது.
3. வீட்டுக்குள்ளும், மொட்டை மாடிகள், சுவர்களில் கருப்பு நிறம் படிந்திருப்பதற்கு gloeocapsa magma என்ற பாக்டீரியாவே காரணம். இதை குளோரின் தூள் அல்லது பிளீச்சிங் தூள் கொண்டு கழுவி நீக்கலாம்.
4. நொச்சி இலை அல்லது வேப்ப இலை மூலம் வீட்டுக்குள் புகைபோட்டால் நச்சுக்காற்று நீங்கி, ஆரோக்கியம் பெருகும்.

கட்டிடச் சீரழிவு நோய்க்கு மருந்து
நொச்சி இலை, பூண்டு, கிராம்பு, மிளகு ஆகியவற்றைச் சரிசமமாக எடுத்து, அரைத்து ஐந்து கிராம் வீதம் வெந்நீரில் கலந்து காலை, மாலை உட்கொண்டுவந்தால் இந்த நோய் கட்டுப்படும்.
நொச்சி இலையைச் சுடுதண்ணீரில் இட்டால் வரும் ஆவியைக் குறைந்தபட்சம் 20 முறை காலை மாலை சுவாசித்துவந்தால், ஆஸ்துமா நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம்.

பூஞ்சைத் தொற்று
ஈரமான ஆடைகளை அணிவதாலும், நன்றாக ஈரம் உலராத உள்ளாடைகள் அணிவதாலும் படை உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்கக் கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு சம அளவு எடுத்துக் கலந்து, சோப்புக்குப் பதிலாகத் தேய்த்துக் குளிக்கலாம். குளித்த பின் மூன்று நிமிடங்களில் (நீரிலிருந்து அகன்ற பின், தோலின் புற அடுக்கில் 3 நிமிடம் வரைதான் தண்ணீர் தங்கும்) செக்கில் ஆட்டப்பட்ட தேங்காய் எண்ணெயை உடலில் லேசாகத் தேய்த்துவிட்டால் காளான் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம். அது மட்டுமில்லாமல் சூரியப் பாதுகாப்பு காரணியையும் (SPF Sun Protecting Factor) இது கொண்டிருப்பதால், புறஊதாக் கதிர்கள் தோலில் ஏற்படுத்தும் சுருக்கமும் தடுக்கப்படும். தேங்காய் எண்ணெய், தோல் உதிர்வைத் தடுப்பதில் சிறந்ததும்கூட.
இதை மீறிப் படை வந்துவிட்டால், சீமை அகத்தி களிம்பைப் பூசலாம். நாகமல்லி (Rhina Canthus Masutus) 10 இலைகள், ஒரு மிளகு ஆகியவற்றைத் தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தடவி வரலாம்.

தலையணை உறை
மழைக் காலத்தில் வீட்டுக்குள் நிலவும் குளிர்ந்த காற்றோட்டத்தால் மெத்தை விரிப்புகள், பாய்கள், தலையணை உறையைப் பூஞ்சை தொற்றுகளுக்கும், படுக்கை உண்ணி (Bed mite) என்ற சிறுபூச்சிகளும் பல்கிப் பெருகி இருக்கும். வெளியே செல்ல அணியும் ஆடைகளை தினமும் கசக்கிக் கட்டுகிறோம். அதே அளவுக்கு இரவில் நம் உடலுடன் ஒட்டியிருக்கும் தலையணை உறை மற்றும் மெத்தை விரிப்புகளை மாதக்கணக்கில் துவைக்காமல் இருப்பது எப்படிச் சரியாகும்? இதனால் சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இரையாகிறோம். தலையணை உறை, மெத்தை விரிப்புகளை வாரம் ஒருமுறை சுடுதண்ணீரில் இட்டுத் துவைத்துப் படுக்கை உண்ணியை விரட்டுவோம்.

குழந்தைகளுக்கு
அதிக மழையில் குழந்தைகள் சளியால் அவதிப்படுவார்கள். வழக்கமாகத் தலைவலிக்கான களிம்புகளைக் குழந்தையின் மூக்கு, முதுகு, நெஞ்சில் தடவுவது வழக்கமாக இருக்கிறது. இது தவறு. குறிப்பாக இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இப்படிச் செய்யக் கூடாது என்று சர்வதேச அளவில் வலியுறுத்தப்படுகிறது. ஏனென்றால், இந்தக் களிம்புகள் குழந்தையின் மூக்குக்குள் அதிகச் சுரப்பை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் சுவாசப் பாதையில் சளியை வெளியேற்றும் முடிகளை உடைய செல்கள் இல்லாததால், சளி வெளியேறாமல் போய் நோய் நிலைமை மோசமாகக் கூடும்.
கற்பூரவல்லி இலை அல்லது நவரை பச்சிலை என்ற இலையின் சாற்றை 2.5 மி.லி. வெந்நீரில் கலந்து இரண்டு வேளை புகட்டுவது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் சித்த மருத்துவர் ஆலோசனைப்படி உரை மாத்திரையை வழங்கலாம்.

பிரளி
தண்ணீர் அசுத்தத்தாலும், கைகளையும் காய்கறிகளையும் நன்றாகக் கழுவிப் பயன்படுத்தாததாலும், குழந்தைகளுக்கு ஏற்படும் பச்சை நிறக் கழிச்சலுக்குப் பிரளி (Giardiasis) என்று பெயர். இதற்கு மருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பயன்படுத்தும் பிரளிக்காய் என்ற வலம்புரிக்காய். இதைச் சட்டியில் பொன் வறுவலாக வறுத்து ஐந்து கிராம் அளவு எடுத்து, 100 மி.லி. தண்ணீர் சேர்த்து, அது 25 மி.லி.யாக வற்ற வைத்துக் காலை, மாலை கொடுத்துவந்தால் உடல் சீரடையும். அதேபோல, வாந்தி பேதிக்கு இணை உணவாக நெற்பொரியைக் கஞ்சியாக வழங்கி வரலாம்.
இப்படியாக மழைக் காலத்தில் நோய் தாக்காமலும், நோய் தாக்கினாலும் எளிய சித்த மருத்துவ வழிமுறைகள், சித்த மருந்துகளால் ஆரோக்கியமாக வாழ முடியும்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: sriramsiddha@gmail.com
source.hindu

Post a Comment

0 Comments